Wednesday, April 11, 2018

வரலட்சுமியின் ‘வெல்வெட் நகரம்’

மேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வெல்வெட் நகரம்.’ இதில் முதல் முறையாக கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் வரலட்சுமி. இவருடன் மாளவிகா சுந்தர், ரமேஷ் திலக், அர்ஜெய், ‘துருவங்கள் பதினாறு ’ புகழ் பிரகாஷ் ராகவன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பகத்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, ‘அருவி’ படத்தின் படதொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா எடிட்டிங் செய்க்கிறார். ‘கோலி சோடா 2’ புகழ் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். இப்படத்திற்கு சண்டை பயிற்சி 'துப்பறிவாளன்' தினேஷ். இதற்கு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மனோஜ்குமார் நடராஜன்.




படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது,‘ கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஃபீமேல் சென்ட்ரிக் (female centric) திரைப்படம் இது. சில ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் மற்றும் சென்னையில் நடைபெற்ற வெவ்வேறு உண்மை சம்பவங்களை தழுவி ஆக்சன் திரில்லராக உருவாக்கப்பட்ட படம் தான் ‘வெல்வெட் நகரம் ’. இதன் திரைக்கதை 48 மணி நேரத்தில் நடைபெறுவது போல் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.




இதில் மதுரையில் களப்பணியாற்றும் பத்திரிக்கையாளராக வரலட்சுமி நடித்திருக்கிறார். கொடைக்கானலில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு இழைக்கப்பட்ட ஒரு அநீதிக்கான ஆதாரத்தைத் தேடியும், அதன் முழு பின்னணியையும் பற்றி துப்பறிவதற்காக மதுரையிலிருந்து சென்னைக்கு வருகிறார் வரலட்சுமி. இங்கு அவர் சந்திக்கும் எதிர்பாராத சம்பவங்களை விறுவிறுப்பான ஆக்சன் கலந்து சொல்லும் படமாக ‘வெல்வெட் நகரம் ’ தயாராகியிருக்கிறது.




படத்தின் படபிடிப்பு சென்னை, கொடைக்கானல், மதுரை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றிருக்கிறது இதன் இறுதிக்கட்ட படபிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.’ என்றார்.

No comments:

Post a Comment