Monday, January 1, 2018

அன்புள்ள ரஜனிகாந்துக்கு ஓர் ஈழத்தமிழனின் (குரல்) மடல் !

உங்களை தலைவா என்று
விழிக்க முடியாது !
ஏன்னென்றால் எங்களுக்கு
என்றுமே ஒரே ஒரு தலைவன் தான்!



உயர்ந்த நட்சத்திரம் நீங்கள்
உங்கள் "மனிதன்" திரைப்படம் பார்த்து
சினிமாவை காதலிக்க
தொடங்கியவன் நான் !



உலகத் தமிழர்களுக்காக
நோர்வேயில் ஒரு தமிழ்
திரைப்பட விழாவையே
கட்டியெழுப்பி இருக்கிறேன்!



எல்லோரைப் போலவும்
ஒரு சிறந்த நடிகனாக
உங்களை
வானம் அளவு பிடிக்கும்!



ஆனால் நேற்று நீங்கள் முகநூல்
வழியாக ஊடகத்தில் ஆற்றிய
உங்கள் உரையைக் கேட்டேன்
அந்தமாதிரி கலக்கிவிட்டீர்கள் !



உங்கள் நிறைவுரையை
கேட்டுவிட்டு அப்படியே
என்னால்
கடந்து போய்விட முடியவில்லை!



திரைப் படங்களிலே
முத்திரை பதித்த உங்கள் முகத்தை
அரசியல் புத்தகத்தில்
ஆன்மீக முத்திரையோடு பதித்துவிட்டீர்கள் !



நாற்பத்தைந்து வயதில் வராத
பதவி ஆசையா ?
அறுபத்தியெட்டில்
வரப்போகுது என்கிறீர்கள் !?



யுத்தம் வரும் போது
பார்த்துக்கொள்ளலாம்
என்றுதானே அன்று சொன்னீர்கள்
இன்று யுத்தம் வருமுன்னே குதித்துவிட்டீர்கள் !



நீண்ட காலமாய்
பொறுத்துப் பொறுத்து
வெறுத்துப்போன ஊர்காவலனாய்
இடது கையால் தலை கோதினீர்கள் !



வலது கையை இணைத்து
நெஞ்சு நிமிர்த்திய நெகிழ்வோடு
உங்கள் ஸ்டைலில் கண்ணாடி கழற்றி
மீண்டும் அணிந்து வணங்கினீர்கள்!



ஊடகத் தலைப்புச் செய்திகள்
உலகம் முழுதும் பறந்தன
புத்தாண்டு பிறக்கும் முன்பே
பட்டாசுகள் வெடித்தன மகிழ்ச்சி!



எங்கள் தாய்த் தமிழ்நாட்டில்
மூலை முடுக்கெல்லாம்
ஊர் தெருக்களில் கொண்டாட்டங்கள்
உணர்ச்சிக் கொந்தளிப்பில் வான் பிளந்தது!



வந்தாரை வாழ வைக்கும்
தமிழகம்
வந்தாரை ஆளவும் வைக்கும்
என்பது வரலாறு தானே!



நீங்கள் அங்கே வாழ்ந்துகொண்டு
ஆள நினைப்பதில் ஒன்றும் தவறுமில்லை!
இங்கே பிறந்த எங்கள் அடுத்த தலைமுறை
இந்த நாட்டையும் ஆள்வதுபோல்!



அனால் ஒன்றை மட்டும்
உறுதியாக சொல்கின்றோம் மறக்காதீர்கள்
தமிழ் நாட்டின் அரசியலோடு
ஈழத்தமிழர்களின் அரசியலும் கலந்துள்ளது !



தமிழர்களுக்கான ஒரு தேசத்தின்
விடுதலை.. பெரும்வலி.. இனவழிப்புக்கான நீதி
பெருங்கோவம் உள்ளது
அவற்றுக்கான பதில் உங்களிடம் உள்ளதா ?



தமிழ்நாட்டு அரசியலைப் பார்த்து
மற்ற மாநிலத்தார்
எள்ளி நகையாடுகிறார்கள்
என்று நீங்கள் வருவதற்கான காரணத்தைச் சொன்னீர்கள்!



"சிஸ்டம்" - அமைப்பு சரியில்லை
மன்னர்கள் எல்லாம் வின்னர்களாக
மக்களைக் கொள்ளையடிக்கிறார்கள்
என்று வறுத்தெடுத்தீர்கள்!



அரசியலில் சாசனம்
கொள்கைகள் நிலைப்பாடுகள்
நீங்கள் சொன்னது போல்
அமைப்புகள் நிறைய உண்டு!



இவற்றையெல்லாம் கடந்து
நவீன ஊடகமேறி
இந்த அரசியல் போரில்
நீங்கள் வெல்வீர்கள் வெல்லவேண்டும்!



உங்கள் ஒரு துளி வேர்வைக்கு
ஒரு தங்கப் பவுண் அல்ல
ஒரு கிலோ வையிரம்
தந்த உலகத்தமிழர்களும் இருக்கிறார்கள்!



அபூர்வராகம் தொடங்கி
வெளிவரவிருக்கும்
இரண்டு புள்ளி சுழியம் வரை
திரையில் வென்றவர் நீங்கள் !



தமிழர்களைத் தமிழர்களே
ஆளவேண்டும் என்ற கொள்கையில்
உறுதியுடையவன் நான் - இருந்தும்
உங்களை அன்போடு வரவேற்கின்றேன்!



உண்மை உழைப்பு உயர்வென்று
யாரையும் திட்டாமல்
வெளிப்படையான உறுதிமொழியோடு
நீங்கள் வருவதை பாராட்டுகின்றேன்!



செங்கோட்டையை ஆளும் கனவில்
சேற்றில் முளைத்த தாமரைகள்
கடந்து முழு மூச்சாய் எழுந்து
செயலாற்றும் காவலனாய் வாருங்கள் !



கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேல்
பெரும் போர்களைப் பார்த்து
குருதியில் தோய்ந்து எழும்பியவர்கள் நாங்கள்
மூன்று ஆண்டுகள் நீங்கள் திறன்பட நடத்துங்கள்!



உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !



அன்புடன் ஓர் ரசிகனாய்
வசீகரன்
ஒசுலோ, நோர்வே
01.01.2018

No comments:

Post a Comment