Sunday, January 28, 2018

ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சிக்கு தமிழக ஆளுநர் வருகை!

ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை அறக்கட்டளை மற்றும் பண்பு மற்றும் கலாச்சார பயிற்சி முனைவு அறக்கட்டளை இணைந்து நடத்தும் 9ஆவது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி கடந்த 24 ஆம் தேதி தொடங்கியது. இரண்டு லட்சத்து இருபத்து ஓராயிரம் சதுர அடி பரப்பில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளுடன் மிக மிக பிரமாண்டமாய் தொடங்கியுள்ளது. முதல் நாள் பெண்மையைப் போற்றுதல் என்ற தலைப்பிலும், இரண்டாம் நாள் பெற்றோர் பெரியோர் மற்றும் ஆசிரியர்களை வணங்குதல் என்ற தலைப்பிலும், மூன்றாம் நாள் நாட்டுப்பற்றை வளர்த்தல் என்ற தலைப்பிலும் நிகழ்சிகள் நடைபெற்றன. நான்காம் நாளான இன்று 27.01.2018 சனிக்கிழமையன்று சுற்றுச் சூழலைப்பராமரித்தல் என்னும் கருத்தில் நிகழ்வுகள் அரங்கேறின.



ஒவ்வொரு நாளும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கண்காட்சியை பார்வையிடுகின்றனர். இன்று தமிழக ஆளுநர் மேதகு பன்வாரிலால் புரோஹித் வருகை தந்தார். ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை அறக்கட்டளயின் அறங்காவலர்களான ஆடிட்டர் திரு.குருமூர்த்தி, அறங்காவலர் திருமதி ராஜலக்ஷ்மி, குருநானக் கல்லூரியின் தாளாளர் திரு.மஞ்சித் சிங், அருண் எக்செல்லோ தலைவர் திரு சுரேஷ், டி.வி.எஸ்.கேபிடல் தலைவர் திரு.கோபால் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் ஆளுனரை வரவேற்றனர்.



அரங்கிற்கு வந்த ஆளுநருக்கு, கண்காட்சியின் வரவேற்புப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பரம்வீர் விருது பெற்ற வீரர்களின் படங்களைக் காட்டி ஆடிட்டர் குருமூர்த்தி அவர்கள் விளக்கினார். பதாகைகளாக வைக்கப்பட்டிருந்த கண்காட்சியின் குறிக்கோள்களும் விளக்கப்பட்டன. பின்னர் பிரம்ம குமாரிகள் சங்கம், ராமகிருஷ்ண மடம் மற்றும் மறவர் சமூக அரங்கத்தை ஆளுநர் பார்வையிட்டார். மேலும் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்த தமிழக பாரம்பரிய குடிசை அரங்கு, வின் டிவி அமைத்திருந்த மாதிரி கிராமம் ஆகியவற்றுக்கும் ஆளுநர் அழைத்துச் செல்லப்பட்டார். கண்காட்சியை ரசித்துப் பார்த்த ஆளுநர் மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச்சென்றார்.



இன்று சுற்றுச் சூழலைப் பராமரிக்கும் பண்பைப் போற்றும் தினமாகக் கடைபிடிக்கப்பட்டதால், பஞ்சாப் அசோசியேஷன் அமைப்பின் கீழ் இயங்கும் கில் ஆதர்ஷ், பி.என்.டி.ஆதர்ஷ்,அண்ணா ஆதர்ஷ், எம்.ஜி.ஆர். ஆதர்ஷ் ஆகிய நான்கு பள்ளிகளைச் சேர்ந்த 1008 மாணவர்கள் கங்கா வந்தனம் எனும் பண்புப் பயிற்சியை நடத்தினர். குடத்தில் நிரப்பப்பட்ட கங்கை நதி நீருக்கு மலர் தூவி பூஜை செய்து வழிபட்டனர். வைணவ அறிஞர்களில் ஒருவரும் ஓய்வு பெற்ற விமான நிலைய தணிக்கை அதிகாரியுமான திரு. விஜயராகவன், ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை அறக்கட்டளை தலைவருமான திருமதி ராஜலக்ஷ்மி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.



மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் இரண்டாயிரம்பேர் பங்கேற்றனர். விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் இணை இயக்குனர் திரு வீராசாமி,சிட்லபாக்கம் விவேகானந்தா வித்யாலயா பள்ளி முதல்வர் திருமதி ராகினி சுப்பிரமணியம் ஆகியோர் போட்டிகளை நடத்தினர். ஆயிரத்து இருநூறு மாணவ மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகள் மற்று சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளை திரு ஜெயராம் ஒருங்கிணைத்து வருகிறார். மாணவர்களின் மைம் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது.



மாலையில் பாரதிய பறையர் பேரவை சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 61 பந்தி, 121 தெய்வங்களுக்கு பாரம்பரியமாக இசைக்கும் பம்பை, உறுமி, தவில் மற்றும் நாதஸ்வர கலை நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டினார். இதனை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் ரசித்தனர். மக்கள் கூட்டத்தால் இன்று நிரம்பி வழிந்தது குரு நானக் கல்லூரி.

No comments:

Post a Comment