ஹிந்து ஆன்மிக சேவை மையமும் பண்பு மற்றும் கலாச்சார பயிற்சி முனைவு அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் 9ஆவது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி ஜனவரி 24 முதல் 29 வரை சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் நடைபெற உள்ளது. 1. பெண்மையைப் போற்றுதல், 2. பெற்றோர் பெரியோர் மற்றும் ஆசிரியர்களை வணங்குதல், 3.நாட்டுப்பற்றை வளர்த்தல், 4. சுற்றுச்சூழலைப் பராமரித்தல், 5. வனம் மற்றும் வன விலங்குகளைப் பாதுகாத்தல், 6. ஜீவராசிகளைப் பேணுதல் ஆகிய பண்புகளை சமூகத்தில் மேம்படுத்துவதே கண்காட்சியின் நோக்கம்.ஒரு லட்சம் மாணவர்களை சந்தித்து, இப்பண்புகளை பரப்புவதற்காக கண்காட்சி அமைப்பின் சார்பில் 24 விவேகானந்தர் ரதங்கள் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் யாத்திரை மேற்கொண்டு வருகின்றன.
பல லட்சம் மக்களை கண்காட்சிக்கு வரவழைக்கும் நோக்கில் பல்வேறு முன்னோட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.10,800மாணவர்களின் கருத்து சார்ந்த யோகாசனம்,500மாணவர்களின் பண்பு சார்ந்த நீச்சல் பயிற்சி ஆகியவை நடத்தப்பட்டன. இதன் அடுத்தகட்டமாக செவிகளில் தேன் பாய்ச்சும் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது..இதன் பெயர் பாரதீய கானத்தான். கிண்டி அண்ணா பல்கலைகழக விளையாட்டு மைதானத்தில் இன்று 19.01.2018வெள்ளிக்கிழமையன்று மாலை 5 மணிக்கு இந்த அற்புத நிகழ்ச்சி அரங்கேறியது.
புகழ்பெற்ற கர்நாடக இசைப்பாடகிகளான திருமதி. நித்யஸ்ரீ மகாதேவன், திருமதி.ரஞ்சனி, திருமதி காயத்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உலகப்புகழ் பெற்ற கிராமி விருது பெற்ற சர்வதேச இசையமைப்பாளர் திரு ரிக்கி கேஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்..
அரங்கத்தில் அணிவகுத்து நின்ற 16,000மாணவிகளை வழிநடத்தும் பணியை ஆற்றல் மிக்க பாடகிகளான வித்யா கல்யாணராமன், வினயா, சுசித்ரா பாலசுப்ரமணியன், கிர்த்திகா நடராஜன், சஹானா, அஸ்விதா, ஐஸ்வர்யா, அக்ஷயா ஆகியோர் மேற்கொண்டனர்.
இந்த இசைப்பேரியக்கத்தை வழிநடத்தும் தளபதியாகத் திகழ்ந்தவர் இசைமழலை ராம்ஜி அவர்கள்.
இந்நிகழ்ச்சிக்கு முதல் கட்டமாக பல்வேறு பள்ளிகளின் இசை ஆசிரியர்களை வரவழைத்து அவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. பினனர் இசைமழலை ராம்ஜியின் மாணவர்கள் ஏராளமான பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயிற்சி அளித்தனர்.நாள்தோறும் ஒத்திகைகளும் பார்க்கப்பட்டு வந்தன.
பண்புப் பயிற்சியின் இசைப்பிரகடனம் என்று சொல்லும் அளவுக்கு பிரமாண்டமாக திட்டமிடப்பட்டுள்ள இந்த இசை நிகழ்ச்சி இன்று19.01.2018உலகின் செவிகளுக்கு விருந்தளித்தது.
முதல் பாடல் : பிரார்த்தனைப் பாடல். காஞ்சி மகா பெரியவர் என்று போற்றப்படும் பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்கள் எழுதிய சமஸ்கிருதப் பாடல். ‘மைத்ரீம் பஜதா’ என்று தொடங்கும் இப்பாடல் கேட்பவர்களை விழி மூடி ரசிக்க வைத்தது.
பாடல் 2. அகஸ்தியரால் எழுதப்பட்ட விநாயகரைத் துதிக்கும் தமிழ்ப்பாடல்.
பாடல் 3 & 4. பண்பு மற்றும் கலாச்சார பயிற்சி முனைவு அறக்கட்டளையின் கருத்துக்களைக் கூறும் ‘அஸதோ மா ஸத்கமய’ என்ற புகழ்பெற்ற சமஸ்கிருத பாடலும், அசோக் ஜெயின் என்பவரால் எழுதப்பட்ட இந்திப் பாடலும் பாடப்பட்டன.
பாடல் 5. வனம் மற்றும் வன விலங்குகளைப் பாதுகாத்தல் என்னும் கருத்தில் காட்டின் பெருமை சொல்லும் மராத்தி மொழிப் பாடல்.
பாடல் 6.வனம் மற்றும் வன விலங்குகளைப் பாதுகாத்தல் என்னும் கருத்தில் பாம்பின் புகழ்பாடும் தெலுங்குப் பாடல்.
பாடல் 7. ஜீவராசிகளைப் பேணுதல் என்ற பண்பைப் போற்றும் வகையில் புரந்தரதாசர் இயற்றிய யானையைப் பற்றிய கன்னடப் பாடல்.
பாடல் 8. ஜீவராசிகளைப் பேணுதல் என்ற பண்பைப் போற்றி பசுவை வணங்கும் தெலுங்குப் பாடல்.
பாடல்9. ஜீவராசிகளைப் பேணுதல் எனும் பண்பில் துளசியின் சிறப்பைப் பாடும் இந்திப் பாடல்.
பாடல்10. சுற்றுச் சூழலைப் பராமரித்தல் என்னும் பண்பில் பூமித்தாயை வாழ்த்தி புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் சகோதரி ஏ.ஆர்.ரைஹானா அவர்கள் எழுதிய தமிழ்ப்பாடல்.
பாடல் 11. சுற்றுச் சூழலைப் பராமரித்தலைப் போற்றி பூஜ்ய ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர் அவர்களால் சம்கிருததில் எழுதப்பட்ட கங்கை நதியை புகழும் பாடல்.
பாடல் 12. . சுற்றுச் சூழலைப் பராமரித்தல் என்ற கருத்தில் கன்னட புலவர் ‘ஜோகடாசிரி பீலாக்கிநல்லி’ என்பவர் எழுதிய கன்னடப் பாடல்.
பாடல் 13. பெற்றோர் ஆசிரியர் மற்றும் பெரியோர்களை வணங்குதல் என்ற கருத்தில் ‘மாத்ரு தேவோ பவ’ என்ற சமஸ்கிருதப் பாடலும் ‘மாதா பிதா’ என்ற குஜராத்தி பாடலும் பாடப்படுகின்றன.
பாடல் 14.பெற்றோர் ஆசிரியர் மற்றும் பெரியோர்களை வணங்குதல் என்ற கருத்தில் ‘சுதர்ஷன் மௌர்யா’ இயற்றிய இந்திப்பாடல்.
பாடல் 15. ஆசிரியரை வணங்கி பஞ்சாப் மொழியில் எழுதப்பட்ட பாடல்.
பாடல் 16. பெரியோர் மற்றும் ஆசிரியர்களை வணங்கி மலையாளப்பாடல்.
பாடல். 17. பெண்மையைப் போற்றுதல் என்ற கருத்தை வலியுறுத்தி ‘பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா’ என்ற பாரதியின் தமிழ்ப்பாடல்.
பாடல் 18. பெண்மையைப் போற்றுதல் என்னும் கருத்தில் பாரதியின் ‘கும்மியடி’ தமிழ்ப்பாடல்.
பாடல் 19. நாட்டுப்பற்றை உணர்த்துதல் என்ற தலைப்பில் ‘ராம் சிங் தாகூர்’ எழுதிய இந்திப் பாடல்.
பாடல் 2௦. நாட்டுப்பற்றை உணர்த்துதல் என்னும் கருத்தில் ‘விநாயக தாமோதர்தாஸ் சாவர்க்கர்’ எழுதிய மராத்தியப் பாடல்.
பாடல் 21. நாட்டுப்பற்றை உணர்த்தி ‘ரமண சரண தீர்த்த ஆச்சார்யா’ இயற்றிய சமஸ்கிருதப் பாடல்.
பாடல் 22. நாட்டுப்பற்றை உணர்த்துதல் என்ற தலைப்பில் ‘பக்கிம் சந்திர சட்டோபாத்யாய’ எழுதிய ‘வந்தே மாதரம்’ பெங்காலிப் பாடல்.
இப்படி தமிழ், சமஸ்கிருதம், இந்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, மலையாளம், பெங்காலி ஆகிய 9 மொழிகளில் இயற்றப்பட்ட பாடல்களை 16,000 பெண்கள் பாடினர்
பாவாடை, தாவணி, புடவை போன்ற பாரம்பரிய உடைகளை மாணவிகள் அணிந்திருந்தனர்.மேடையில் பாடகிகளும், மேடையின் ஒருபுறம் இசை ஆசிரியர்களும், மறுபுறம் சிறப்பு விருந்தினர்களும் அமர்ந்திருந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் பாடிய காட்சி கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்தாக அமைந்தது.
No comments:
Post a Comment