9 ஆவது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி வேளச்சேரி குருநானக் கல்லூரியில் கடந்த 24 ஆம் தேதி தொடங்கியது. கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற கண்காட்சியை லட்சக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர். ஐந்தாம் நாளான இன்று 28.01.2018 ஞாயிற்றுக்கிழமை தினத்தில் வனம் மற்றும் வன விலங்குகளைப் பாதுகாத்தல் என்ற கருத்தை முன்வைத்து நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பள்ளி மாணவ மாணவிகள் விருக்ஷ வந்தனம் மற்றும் நாக வந்தனம் ஆகிய பண்புப் பயிற்சியில் ஈடுபட்டனர். இதனையொட்டி மரங்களையும், வனங்களையும், பேணி பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் 1,008 தென்னை மர கன்றுகளும், 1,008 நொச்சி செடிகளையும் 1,008 பள்ளி மாணவ – மாணவிகள் பூஜை செய்து வழிப்பட்டனர். இதில் நாக வந்தனம் எனும் பூஜையும் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு இந்து ஆன்மிக மற்றும் சேவை அறக்கட்டளை அறங்காவலர் ஆர்.ராஜலட்சுமி. தலைமை தாங்கினார்.
மாநில சுற்றுச்சூழல் தாக்கம் மற்றும் மதிப்பீடு ஆணைய தலைவரும் முன்னாள் தமிழக வனத்துறை உயர் அதிகாரியமான டாக்டர் என்.கிருஷ்ணகுமார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “நம் நாட்டின் காடுகளின் பரப்பளவு 33 சதவிதம் இருக்க வேண்டும். ஆனால் 23 சதவிதம் தான் உள்ளது. அரசு துறைகளும், சட்டங்களும் மூலம் காடுகளை பாதுகாக்க முடியாது. காடுகளை பாதுகாக்கவும், அதிகரிக்கவும் மாணவர் சமுதாயம் அதிகம் முன் வரவேண்டும்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பெரம்பூர், திருவெற்றியூர் அம்பத்தூர் ஆகிய இடங்களில் உள்ள விவேகானந்த பள்ளி மாணவ – மாணவிகள் வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாத்தல் தொடர்பான நாடகங்கள் மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தினர். மாணவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டதும், அவர்களுக்கு மர கன்றுகள் வழங்கப்பட்டன.
மாலையில் பழங்குடி மக்களான குறும்பர்களின் ஆன்மிக கலை நிகழ்ச்சி நடைபெற்றது. குறும்பர்கள் 120 குலம். அவர்களில் தொட்டியர் என்ற குலத்தினர் இந்த நிகழ்ச்சியை நடத்தினர். தமிழ்நாடு குறும்பர் பேரவை நடத்திய இந்நிகழ்ச்சிக்காக தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் கரவூர் கிராமத்தில் இருந்து ஏராளமான வெண்கல சிலைகள், அரிவாள், ஈட்டி போன்றவை கொண்டுவரப்பட்டன. சித்தப்பா, கலவதப்பா, தொட்டிலி பிரம்மா, பச்சையப்பா, பர்வூரப்பா ஆகிய தெய்வங்களின் சிலைகளும் அவர்களின் வாகனங்களான எருது, குதிரை, யானை,ஆடு, நாய் போன்ற வாகனங்களின் சிலைகளும் என ஐம்பதுக்கும் மேற்பட்ட சிலைகளும் கொண்டுவரப்பட்டன. 10 பெண்கள் பாடல்களைப் பாட, 40 ஆண்கள் சேவை என்ற குரும்பாட்டுத் தோலினால் செய்யப்பட்ட இசைக்கருவியை இசைத்து ஆட, அருள் வந்து உச்சகட்டமாக தலைவில் தேங்காய் உடைக்கப்பட்டது.
சௌராஷ்டிரா மக்களும் கலை நிகழ்சிகளை நடத்தி பார்வையாளர்களை அசத்தினர்.
செவரப்பூண்டி ராஜகோபால் கவுண்டர் அவர்களின் காட்சியம்மன் நாடகக்குழுவினர் ‘கண்டன் கார்கோடகன்’ என்ற தெருக்கூத்தை நடத்தினர். இது மந்திர தந்திர வித்தைகள் நிறைந்த நாடகமாகும். கண்டன் கார்கோடகன் என்பவன் சிவபெருமானிடம் வரம் பெற்று, அந்த மமதையில் தேவர்களை துன்புறுத்தி வந்தான். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். ஆனால் சிவபெருமான், என் மனைவி மலையாள தேசம் சென்றுவிட்டாள். அங்கு பகவதியாக வீற்றிருக்கிறாள். மந்திர தந்திரங்கள் கற்றிருக்கிறாள். அவளை அழைத்து வாருங்கள் என்கிறார். அதன்படியே பகவதி அழைத்துவரப்பட. முட்டைக்குள் அடைத்து வைக்கப்பட்ட்டிருந்த கண்டன் கார்கோடகனை வதைப்பதுதான் இந்த தெருக்கூத்து.
கண்காட்சியை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சார் கே.பாண்டியராஜன், நடிகர்கள் விவேக், கிட்டி என்ற ராஜா கிருஷ்னாமுர்த்தி உட்பட ஆயிரக்கணக்கானேர் குடும்பங்களுடன் வந்து கண்காட்சியை பார்வையிட்டனர்.
கண்காட்சி வளாகத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கான உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள கோவில் ரதங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றை பார்வையாளர்கள் பார்வையிட்டனர்.
கண்காட்சியில், திருக்குறள், ஆத்திச்சூடி, பன்னிருதிருமுறைகள், ஒப்புவித்தல், பல்லாங்குழி, பரமபதம், கோலி, கோலமிடுதல் உள்ளிட்ட போட்டிகளில் 2 ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் வெற்றிப் பெற்ற 1,200 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கண்காட்சியின் நிறைவு நாளான இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு ஜீவாராசிகளை பாதுகாக்கும் வகையில் பசுக்களுக்கும், யானைகளுக்கும் பூஜை நடக்கிறது. தொடர்ந்து. துளசி செடியை போற்றும் துளசி வந்தனம் நடக்கிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீநிவாச திருக்கல்யாணம். நிகழ்ச்சி நடக்கிறது.
நாளைய நிகழ்ச்சிகளில் ஏழு ஜீயர்களும், தருமபுரம் ஆதீனம் இளைய பட்டம் அவர்களும் வருகை தர உள்ளனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து ஆன்மிக மற்றும் சேவை அறக்கட்டளை அறங்காவலர்கள் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி, ஆர். ராஜலட்சுமி ஆகியோர் செய்து வருகின்றனர்.
படம் 1. கண்காட்சியில் மக்கள் வெள்ளம்.
படம் 2.விருக்ஷ வந்தனம், நாக வந்தனம்.
படம் 3.குறும்பர் இன மக்களின் ஆன்மிக கலை நிகழ்ச்சி.
படம் 4.கண்டன் கார்கோடகன் தெருக்கூத்து.
No comments:
Post a Comment