Wednesday, January 24, 2018

இந்து ஆன்மிக மற்றும் சேவை கண் காட்சியில் 3500 சிறுமிகளுக்கு பாத பூஜை!

இந்து ஆன்மிக மற்றும் சேவை மையமும் பண்பு மற்றும் கலாச்சார பயிற்சி முனைவு அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் 9 ஆவது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி வேளச்சேரி குருநானக் கல்லூரியில் இன்று 24.01.2018 புதன் கிழமை முதல் 29.01.2018 திங்கட்கிழமை வரை 6 நாட்களுக்கு நடைபெறுகிறது.



1. பெண்மையைப் போற்றுதல், 2. பெற்றோர் பெரியோர் மற்றும் ஆசிரியர்களை வணங்குதல், 3. நாட்டுப்பற்றை வளர்த்தல், 4. சுற்றுச் சூழலைப் பராமரித்தல், 5. வனம் மற்றும் வன விலங்குகளைப் பாதுகாத்தல், 6.ஜீவராசிகளைப் பேணுதல் ஆகிய ஆறு பண்புகளை சமூகத்தில் மேம்படுத்தும் உன்னத நோக்கத்தில் இக்கண்காட்சி நடத்தப்படுகிறது.



முதல் நாளான இன்று பெண்மையைப் போற்றுதல் என்ற பண்பை முன்வைத்து நிகழ்சிகள் நடத்தப்பட்டன.



இந்த ஆண்டு விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதையின் 150 ஆவது பிறந்த ஆண்டு. இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம். மேலும் பண்பு மற்றும் கலாச்சார பயிற்சி முனைவு அறக்கட்டளையின் குறிக்கோள்களில் ஒன்றான பெண்மையை போற்றுவோம் என்ற பண்பை முன்வைத்து இன்று நிகழ்ச்சிகள் நடத்தபட்டன. இதனால் இன்றயை கண்காட்சி நிவேதிதை அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.



பெண்மையைப் போற்றி இன்று காலையில் நடத்தப்பட்ட கன்யாவந்தனம் என்ற நிகழ்ச்சி வித்தியாசமானதாக இருந்தது. இதற்காக ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுமிகளை பல்வேறு பள்ளிகளில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்தனர், அந்த சிறுமிகள் புது பாவாடை சட்டை கம்மல் ஒட்டியாணம் உள்ளிட்டவற்றால் அலங்கரிக்கப்பட்டு நாற்காலிகளில் அமரவைக்கப்பட்டனர். பள்ளிகளில் படிக்கும் சிறுவர்கள் அந்த சிறுமிகளின் பாதங்களைக் கழுவி, பாதங்களில் மஞ்சள்பூசி பொட்டு வைத்து மலர் தூவி பாதபூஜை செய்து வணங்கி வழிபட்டனர்.



பெண் என்பவள் ஒரு போகப் பொருள் அல்ல அவள் வணங்கத்தக்கவள், மானுட இனத்தின் ஒரு பகுதி என்பதை சிறுவர்களுக்கு உணர்த்தும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.



இதைப் போலவே கணவனை இழந்த பெண்களையோ கணவனால் கைவிடப்பட்ட பெண்களையோ இந்த சமுகம் போதிய அளவு மதிப்பதில்லை. அது தவறு என்பதையும், அந்த பெண்கள் மரியாதைகுரியவர்கள் தான் என்பதை உணர்த்தும் வகையிலும் சுவாசினி வந்தனம் என்னும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது இதில் முதியோர் இல்லத்திலிருந்து அழைத்து வரப்பட்ட சுமார் 40 விதவை மற்றும் கணவனைப் பிரிந்த பெண்களுக்கு ஆண்களும் பெண்களும் பாத பூஜை செய்து அவர்களை போற்றினர். இந்த நிகழ்ச்சியில் இந்து ஆன்மிக மற்றும் சேவை அறக்கட்டளையின் அறங்காவலர் திருமதி. ராஜலட்சுமி, வேல்ஸ் பல்கலைகழக துணைவேந்தர் திருமதி. ஆர்த்தி கணேஷ், சென்னை ராமகிருஷ்ணா மடத்தின் மேலாளர் சுவாமி. விமூர்த்தானந்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



நிகழ்வில் பேசிய ஸ்வாமி விமூர்த்தானந்தா, இங்கு பூஜை செய்யப்பட்ட பெண்கள் அனைவரும் கடவுள்கள் என்றார். பூஜை செய்த சிறுவர்களை தேவர்கள் என்றும் புகழ்ந்தார். நமது பாரம்பரியத்தைக் காக்க இளைய சமுதாயம் உறுதி ஏற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.



பெண்மையைப் போற்றும் மற்றொரு நிகழ்வாக கண்காட்சி வளாகத்தில் இளம் பெண்கள் வேத மந்திரங்கள் ஓதி யாகம் வளர்த்தனர். இந்திய சமூகத்தில் ஆண்கள் யாகம் வளர்ப்பதுதான் வாடிக்கை. டி.ஏ.வி.பள்ளியில் படிக்கும் 50 பேர் வேத மந்திரங்களை முறையாகப் பயின்று ஒரே குரலில் ஓங்கி ஒலித்தபோது பார்வையாளர்கள் மெய் சிலிர்த்தனர், ஆர்ய சமாஜத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்த யாகத்தை ஒரு புரட்சி நிகழ்வாக மக்கள் பார்த்தனர்,



பெண்மையைப் போற்றுவோம் என்ற பண்பை மாணவர்களிடம் கொண்டுசெல்லும் நோக்கில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சிறப்பு போட்டிகள் நடத்தப்பட்டன.அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா, நுங்கம்பாக்கம் எம்.ஓ.பி.வைஷ்ணவா,திநகர் சாஷன் ஜெயின், வேளச்சேரி குருநானக் கல்லூரி, வேல்ஸ் டெக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 50 பேர் போட்டிகளில் கலந்துகொண்டனர். பேச்சு, பவர் பாயின்ட் விளக்கம், மைம் எனப்படும் வசனமில்லா நாடகம் போன்றவற்றை செய்து காட்டினர்.



மாலையில் கேரள மாநில கலை நிகழ்சிகள் நடந்தன. களரி சண்டைப் பயிற்சி, கதகளி நடனம் உள்ளிட்ட நிகழ்சிகள் கலை கட்டின.



கண்காட்சியில் 1,36,000 சதுர அடியில் 500அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.34,000 சதுர அடியில் கலை அரங்கும், 15,000 சதுர அடியில் திருப்பதி தேவஸ்தானம், ஈஷா யோகா மையம் போன்ற அமைப்புகளுக்கான அரங்குகளும், வின் டிவியின் சார்பில் 8000 சதுர அடியில் கிராமமும், தொண்டர்கள் உணவருந்த 4,000 சதுர அடியில் அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளன. 18,000 சதுர அடியில் மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்படுகின்றன. மொத்தம் இரண்டு லட்சத்து இருபதாயிரம் சதுர அடிக்கும் மேற்பட்ட பரப்பளவில் மிக மிக பிரம்மாண்டமான அளவில் கண்காட்சி நடைபெறுகிறது.



கண்காட்சியின் முதல் நாளான இன்று ஆயிரக்கணக்கானோர் குடும்பம் குடும்பமாக வந்து கண்காட்சியைப் பார்வையிட்டனர்.

No comments:

Post a Comment