ஒரு வலுவான வில்லன் இருந்தால் மட்டுமே அக்கதையின் கதாநாயகன் மேலும் வலுவாக முடியும். ஒரு வில்லனின் கதாபாத்திரம் என்பது அந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றதாகும். ஜனரஞ்சகமான படங்களை சொன்ன நேரத்திற்குள் முடித்து வெற்றி பெறும் இயக்குனர் R கண்ணனின் , எழுத்து மற்றும் இயக்கத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்கவுள்ளார். 'என்னை நோக்கி பாயும் தோட்டா' பட பாடல்களின் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்கள் மனதை கொள்ளையடித்திருக்கும் மேகா ஆகாஷ் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இந்த அதர்வா- மேகா ஆகாஷ் ஜோடி தமிழ் சினிமா ரசிகர்களை பெருமளவு கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்திற்கு பிரபல பாலிவுட் நடிகர் உபன் படேல் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்தி இப்படத்தின் பலத்தை பல மடங்கு கூட்டியுள்ளது. இதற்கு முன்பே இது மாதிரியான கதாபாத்திரங்களை ஏற்று அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இயக்குனர் R கண்ணன் பேசுகையில் , '' இப்படத்தின் வில்லன் கதாபாத்திரம் மிகவும் வலுவான மற்றும் சவாலான ஒன்று . இந்த கதாபாத்திரத்தில் நடிக்க உபன் படேலை அணுகி அவரிடம் இப்படத்தின் கதையையும் அவரது கதாபாத்திரத்தையும் சொன்னேன். கதையை கேட்ட உடனேயே நடிக்க ஒப்புக்கொண்டார். அவருக்கு கதை அவ்வளவு பிடித்திருந்தது. நிறைய வில்லன் கதாபாத்திரங்கள் அவரை நோக்கி வந்துக்கொண்டிருப்பதாகவும் ஆனால் இந்த கதை தான் அவரை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த கதாபாத்திரத்திற்கு அவர் தான் மிகவும் பொருத்தம் என உறுதியாக நம்புகிறேன். இந்த படம் அவரை அடுத்த தளத்திற்கு நிச்சயம் கொண்டு செல்லும். அவரது இந்த கதாபாத்திரத்தின் தோற்றம் மற்றும் கெட் அப் ஆகியவை மிகவும் ப்ரத்யேகமாகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். கிளைமாக்ஸ் காட்சியில் கதாநாயகன் அதர்வாவுக்கு உபன் படேலுக்கு இடையில் நடக்கும் சண்டை காட்சி இப்படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக நிச்சயம் இருக்கும் ''
இந்த படத்தை 'மசாலா பிக்ஸ்' நிறுவனத்தின் சார்பில் ஆர். கண்ணன் தயாரிக்கிறார்.. R J பாலாஜி,சதிஷ் மற்றும் சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
ஜனவரி 19 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கவுள்ள இப்படம் 'அர்ஜுன் ரெட்டி' புகழ் ராதன் இசையில், பிரசன்னா S குமார் ஒளிப்பதிவில் , R K செல்வாவின் படத்தொகுப்பில் , ஸ்டண்ட் சில்வாவின் சண்டை இயக்கத்தில், ஷிவா யாதவின் கலை இயக்கத்தில் உருவாகவுள்ளது.
No comments:
Post a Comment