தமிழ் சினிமா ரசிகர்களும் திரைத் துறையினர் பல்வேறு காரணங்களுக்காக ஒரு சேர பாராட்டக்கூடிய, பெருமையுடன் பார்க்கக்கூடிய ஒரு நடிகராக உயர்ந்திருக்கிறார் விஜய் சேதுபதி. அதற்கு ஒரு முதன்மை காரணம் விஜய் சேதுபதியின் பல்வேறு தளங்களில் கதை கதாபாத்திரம் தேர்வு செய்யும் தன்மையும், அவற்றை சிறப்பாக செய்து முடிக்கும் திறமையுமே. அவருடைய அசுர வளர்ச்சியும், ரசிகர் பட்டாளமும் அசாதாரணமானது. எல்லைகளை கடந்தும் அவரது ரசிகர் பட்டாளம் விரிவடைந்துள்ளது. பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் சீதக்காதி மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் படம். இதுவரை பார்க்காத ஒரு வித்தியாசமான படமாக சீதக்காதி உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதியின் 25வது படமான இந்த படத்தில், அவரின் கதாபாத்திரம் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும். பேசன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம், உமேஷ், ஜெயராம், அருண் வைத்யநாதன் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.
படத்தை பற்றி தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறும்போது, "எல்லா வகைகளிலும் சீதக்காதி புதுமையான, வித்தியாசமான ஒரு படம். விஜய் சேதுபதி கதாபாத்திரத்தை இதயத்தையும், ஆன்மாவையும் கொடுத்து உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் பாலாஜி தரணீதரன். அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் விஜய் சேதுபதி. தனித்துவமான கதை, கதாபாத்திரங்களை எடுத்து செய்யும் விஜய் சேதுபதி போன்ற ஹீரோக்களுக்கே இது வித்தியாசமான கதாபாத்திரம் தான். விஜய் சேதுபதியின் தோற்றம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சர்யமாக இருக்கும். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட சரியான நேரத்தை எதிர்நோக்கியிருக்கிறோம். அதை வெளியிட விஜய் சேதுபதியின் பிறந்த நாளான ஜனவரி 16ஐ விட சிறப்பான நாள் வேறென்ன இருக்க முடியும். ஜனவரி 16ஆம் தேதி வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை வாய் பிளந்து பார்க்க வைக்கும். விஜய் சேதுபதியின் தோற்றம் ரசிகர்களால் நம்ப முடியாத அளவுக்கு ஆர்வத்தை தூண்டும். சீதக்காதி படத்தை நாங்கள் தயாரித்தது மிகவும் பெருமையான விஷயம்" என்றார்.
No comments:
Post a Comment