Thursday, September 21, 2017

‘திரு.வி.க. பூங்கா’ திரைப்படத்தின் முன்னோட்டத்தை இன்று வெளியிட்டு பேசினார் இந்தியாவின் தங்கமகன் பத்மஸ்ரீ மாரியப்பன்

அவர் பேசும் போது, ‘‘இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளரும், இயக்குநரும், இந்தப் படத்தின் கதாநாயகனுமான திரு.செந்தில் செல்.அம் . அவர்கள் என்னை பெங்களூருவில் சந்தித்து சொல்லும் போதே, ‘முதல்முறையாக திரைப்படம் தயாரித்திருக்கிறேன். காதல் தோல்வியில் சிலர் தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். அதை தடுக்கும் முயற்சியாக இந்த படத்தை எடுத்திருக்கிறேன்’ என்றார்.



எனக்குப் படத்தை போட்டும் காண்பித்தார். படம் எனக்குப் பிடித்திருந்தது. ரொம்ப சந்தோஷமாக உணர்ந்தேன். ஏனென்றால் எங்கள் வீட்டில் நான், அக்கா, இரண்டு தம்பிகள் என நான்கு பேர் உள்ள குடும்பம். அப்பா இல்லாததால் அம்மா தான் கிடைக்கிற வேலைக்கெல்லாம் சென்று கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தார்கள். அம்மா இல்லையென்றால் இன்று நான் இந்த இடத்தில் இல்லை. அவருக்கு இந்த தருணத்தில் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.



மாணவர்கள் காதலில் தோல்வியடைந்தால் தற்கொலையில் ஈடுபடுகிறார்கள். நானும் காதலித்திருக்கிறேன். நான் காதலித்தது விளையாட்டை.



சில நேரங்களில் எனக்கும் சில கஷ்டமான தருணங்கள் அமைந்திருக்கின்றன. பணம் இல்லாமல் விளையாட்டை தொடர முடியாமல் இருந்திருக்கிறது. 2012ல் பாஸ்போர்ட் கிடைக்காமல் ஒலிம்பிக்கில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு தவறியிருக்கிறது.



அந்த சமயத்தில் கூட மனம் தளரவில்லை. கஷ்டப்பட்டால் என்றாவது ஒரு நாள் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பதில் உறுதியாக இருந்தேன். நான் முடியாது என்று நினைத்து, அன்று தவறான முடிவு எடுத்திருந்தால் இந்தளவுக்கு வந்திருக்க மாட்டேன். கஷ்டப்பட்டு உழைத்ததால் தான் நான் இந்தளவுக்கு வந்திருக்கிறேன்.



‘திரு. வி.க. பூங்கா’ படத்திலும் இந்த கருத்தை தான் சொல்லியிருக்கிறார்கள். சரியான கதைக்கருவை படமாக்கியிருக்கிற அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.’’ என்றார்.



நிகழ்ச்சியில் தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான திரு.செந்தில்.செல்.அம் பேசுகையில், ‘இந்த படத்தைப் பற்றி நான் எதுவுமே பேசப் போவதில்லை. ஒரு நல்ல படத்தை இயக்கியிருக்கிறேன். நாம் செய்கிற பாவக் கணக்குகள் நம் சந்ததியை பாதிக்கும் என்பார்கள். உண்மையாய் உழைத்து, தியேட்டரில் பணம் கொடுத்து இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் நிச்சயம் திருப்தியுறுவார்கள்.



அவர்களை ஏமாற்ற மாட்டேன். அப்படிச் செய்திருந்தால் அதுவும் என் பாவக் கணக்கில் தான் சேரும். இந்த படம் அப்படியான படமில்லை. இன்றைய நிலையில் திருவள்ளுவர் இருந்திருந்தால், ‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்கிற குறளில், ‘அறிவு’ என்பதை எடுத்துவிட்டு, ‘பகுத்தறிவு’ என்று மாற்றியிருப்பார்.



பகுத்தறிவுடன் யாரும் சிந்திக்காததால் தான் இன்று தோல்விகளும், தற்கொலைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் படம் தற்கொலை, மனித குலத்திற்கு எதிரான செயல் என்று சொல்கிற படம்’ என்றார்.

No comments:

Post a Comment