விவசாயிகளுக்கு உதவ புதிய முடிவை அறிவித்த லாரன்ஸ்..!
“இனி தினமும் இளநீர் தான்” ; லாரன்ஸின் மனமாற்றத்துக்கு காரணம் யார்..?
‘விவசாயியின் கோரிக்கையை நிராகரித்தேன்” ; குற்ற உணர்ச்சியை வெளிப்படுத்திய பாக்யராஜ்..!
“ராணுவ பயிற்சி போல விவசாய பயிற்சியும் கட்டாயமாக்கப்பட வேண்டும்” ; பாக்யராஜ் வேண்டுகோள்..!
“கல்வியால் தான் விவசாயம் அழிந்தது” ; தங்கர் பச்சான் அதிரடி பேச்சு..!
‘ஐம்பது சதவீத உழைப்பு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது” ; உழவே தலை விருதுகள் 2017 விழாவில் பூபேஷ் நாகராஜன் தகவல்..!
இந்திய விவசாயிகள் தினத்தன்று நம் விவசாயிகளை கொண்டாடும் வகையில் சென்னை சேப்பாக்கம் அண்ணா அரங்கில் “உழவே தலை விருதுகள் வழங்கும் விழா வெகு விமர்சையாக நேற்று நடந்தது. இவ்விழாவை இந்திரா குழுமத்தின் இந்திரா ஆக்ரோ டெக் விவசாய்த்தையும் விவசாயிகளையும் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்திருகின்றது.
இன்று பல்வேறு துறைக்கு பல்வேறு விருதுகள் வருடா வருடம் பலரும் வழங்கிவரும் நிலையில் நமக்கெல்லாம் உணவு தரும் உயிர் தரும் விவசாயிகளை சிறப்பிக்க முன்வந்து தன் முதல் அடியை உழவே தலை விருதுகள் மூலம் ஏற்பாடு செய்துள்ளார் இந்திரா ஆக்ரோ டெக்கின் தலைவர் பூபேஷ் நாகராஜன்.
இவ்விழாவில் திரைக்கதை ஜித்தர் திரு.கே.பாக்கியராஜ், இயக்குனர் திரு.தங்கர் பச்சான், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் தலைவர் திருமதி.R.தமிழ்செல்வி போன்ற பலரும் பங்குகொண்டு சிறப்பித்தனர். திரைவிழா, பொழுதுபோக்கு விழாக்களுக்கு கிடைக்கும் வரவேற்பை போன்று விவசாயிகளுக்கான இவ்விழாவுக்கும் மக்கள் கூட்டம் அரங்கு முழுவதும் நிரம்பியது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான விருதுகள் வழங்கும் நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன், இந்திரா ஆக்ரோவின் தலைவர் திரு.பூபேஷ் நாகராஜன் அவர்கள் விழாவின் சிறப்புரையில் பேசுகையில் எங்களோட இந்திரா குழுமத்தோட முக்கிய நோக்கத்துல ஒன்னு விவசாய நிலத்தை வீடாகவோ, வீட்டு மனையாகவோ மாத்தகூடாதுங்கிறதுதான் என்றார். மேலும் அவர் பேசுகையில் நாங்கள் இந்திரா ஆக்ரோ டெக்கின் சார்பாக APO (agriculture processing outsource) என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளோம், இத்திட்டத்தை முதன்முதலில் செயல் முறைக்கு கொண்டுவருவது எங்கள் அமைப்புதான் என்று கூறினார். ”நம் நாட்டின் மக்கள்தொகையை வைத்து பார்க்கையில் நம் உழைப்பு சக்தியில் ஐம்பது சதவிதத்தைத்தான் பயன்படுத்துகின்றோம், இன்னும் முழு உழைப்பையும் பயன்படுத்தினால் பல சாதனைகள் புரியலாம், எனவே இன்று உழவே தலை விருதுகள் நிகழ்ச்சியை நாங்கள் தொடங்கியுள்ளோம் ஆனால் இன்று முதல் எல்லா இளைஞர்களும் எங்களோடு கைகோர்த்து பயனிக்க அழைக்கின்றோம் என்று கூறி அனைவரையும் ஊக்கப்படுத்தினார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குனர் கே.பாக்யராஜ் தனது கையால் இந்த விருதுகளை வழங்கி கௌரவித்தார். இந்த விருதுபெற்றவர்களில் திரையுலகை சேர்ந்த இயக்குனர், நடிகர் என இரு தளத்தில் இயங்கிவரும் தங்கர் பச்சான், ராகவா லாரன்ஸ் ஆகியோரும் இடம்பிடித்திருந்தனர்.
உழவே தலை இளைஞர் சக்தி விருதை பெற்ற நடிகர் ராகவா லாரன்ஸ் பேசும்போது, “என்னுடைய பார்வையில் விவசாயிகள் என்பவர்கள் கடவுள்.. இன்று அவர்கள் கையால் இந்த விருது வாங்கியதை கடவுள் கொடுத்த விருதாகத்தான் பார்க்கிறேன்.. இதுவரை சினிமாவில் நடிப்புக்கு விருது வாங்கிய நான் நிஜத்துக்கு விருது வாங்கியது நிச்சயம் எனக்கு புதிய அனுபவம்.
இங்கே பேசிய ஒருவர் இளநீர் வாங்கி குடிப்பது உடலுக்கு மட்டுமல்ல, விவசாயின் வாழ்க்கைக்கும் ஆரோக்கியம் என்று கூறினார். என்னுடைய காப்பகத்தில் சுமார் 6௦ குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களை பார்க்கும்போதெல்லாம் காபி, டீ சாப்பிட்டீர்களா என கேட்பது வழக்கம். இனி அவர்களிடம் ‘இளநீர் சாப்பிட்டீர்களா என்றுதான் கேட்பேன். ஆம் என் குழந்தைகளுக்கு இனி இளநீர் தான் கொடுக்கப்போகிறேன்” என புதிய முடிவு ஒன்றை அறிவித்தார்.
உழவே தலை 2017 சிறப்பு விருது பெற்ற ஒளிப்பதிவாளர், இயக்குனர், நடிகருமான தங்கர் பச்சான் பேசும்போது, “நானும் உழவனுடைய மகன் தான். இன்று உழவன் கைகட்டி பிச்சை எடுக்காத நிலை தான் பாக்கி.. இதற்கு அரசாங்கமும், பெரும் முதலாளிகளும் மட்டுமே காரணமல்ல, இளைஞர்களும் பொதுமக்களும் கூட காரணம் தான்.
இன்று நகரத்தில் இருக்கும் 7௦ சதவீதம் பேர் கிராமத்தில் நிலங்களை விற்றுவிட்டு பிழைக்க வந்தவர்கள் தான். கல்வி வந்ததும் தான் விவசாயம் அழிந்தது.. உண்மைதான், அதற்கு முன் விவசாயம் நன்றாக இருந்தது. மக்களும் நோய்நொடியில்லாமல் வாழ்ந்தார்கள். இன்று நான் விவசாயம் செய்கிறேன்.. ஆனால் நாளை என் பிள்ளைகள் செய்யமாட்டார்கள்.. எனக்கு அந்த குற்ற உணர்ச்சி இப்போதும் இருக்கிறது.
உழவு என்பது தொழில் அல்ல. அது உயிரோடு கலந்துவிட்ட மூச்சுக்காற்று. பசுமைப்புரட்சி என்கிற பெயரில் மக்களை கொன்று வருகிறார்கள்.. விவசாயத்தை அழித்து வருகிறார்கள். மழையை நம்பி விவசாயம் செய்தவரை நிலத்தடி நீரை தொடவே இல்லை. ஆனால் இன்று ஆறு மலடாகிவிட்டது. பழைய விவசாய முறைக்கு மக்கள் மாறனும்.
விவசாயத்தை அழித்தவர்களுக்குத்தான் இப்போதெல்லாம் விருது வழங்கப்படுகிறது. அதற்கான ஆராய்ச்சிக்காக கோடிகளில் பணம் தரப்படுகிறது. அதனால் தான் ஏழெட்டு அரசு விருதுகளை நான் வாங்கவே இல்லை. நகரத்திற்கு வந்தவர்கள் மீண்டும் கிராமத்துக்கு திரும்பவேண்டும்.. கூட்டுப்பண்ணை விவசாயத்தை மேற்கொள்ளவேண்டும்.. விவசாயி பணம் விவசாயிக்கே கிடைக்க.. இடையில் உள்ள தரகர்களை ஒழிக்கவேண்டும். அப்படி ஒரு திட்டம் என் மனதில் நீண்ட நாட்களாக ஓடிக்கொண்டு உள்ளது. இந்திரா ஆக்ரோடெக் சேர்மன் பூபேஷை பார்கும்போது, இனி வருங்காலத்தில் அந்த திட்டத்திற்கு உயிர்கொடுக்க முடியும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது’ என உணர்ச்சி பொங்க பேசினார் தங்கர் பச்சான்..
நிகழ்ச்சியின் இறுதியில் முத்தாய்ப்பாக பேசிய இயக்குனர் பாக்யராஜ், “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்.. மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வார்’ என வள்ளுவர் கூறியுள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களாக டெல்லியில் நடந்த விவசாயிகளின் போராட்டத்தை பார்க்கும்போது மனம் ரொம்பவே வேதனைப்பட்டது. நானும் கிராமத்தில் இருந்து வந்தவன் தான்.
கிராமங்களுக்கு படப்பிடிப்பு நடத்த செல்லும்போது அங்கு வெள்ளந்தியான விவசாயிகளையும் அவர்களது அன்பையும் கண்டு திகைத்துப்போனது உண்டு.. நான் இது நம்ம ஆளு படம் எடுத்த சமயத்தில் ஒரு கிராமத்தில் பர்ணசாலை ஒன்றை செட் போட்டு படமாக்கினோம். அது இயற்கையாக தெரிவதற்காக அந்தப்பகுதியை சேர்ந்த விவசாயியை அழைத்து சுற்றிலும் பூந்தோட்டம் அமைக்க சொன்னோம். க்ளைமாக்ஸில் அந்த பர்ணசாலையை தீவைத்து கொளுத்த வேண்டிய காட்சி எடுக்கப்பட்ட வேண்டும்.. ஆனால் இதுபற்றி தகவல் கேள்விப்பட்ட அந்த விவசாயி, பர்ணசாலையை கொளுத்த வேண்டாம் என்றும், அப்படி செய்தால் இவ்வளவு நாட்கள் வளர்ந்த பூந்தோட்டமும் அந்த நிலமும் கூட நாசமாகிவிடும் என்று கண்ணீர் மல்க மன்றாடினார். ஆனால் நாங்கள் அந்த காட்சியை எடுத்தே ஆகவேண்டும் என்பதால், அந்த விவசாயியை வேறுவேலையாக வெளியூர் அனுப்பி வைத்துவிட்டு அந்தக்காட்சியை படமாக்கினோம். திரும்பிவந்து, அந்த இடத்தை பார்த்த அந்த விவசாயியின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்..? இது நம்ம ஆளு படத்தை பற்றிய பேச்சை எடுக்கும்போதெல்லாம் இன்னும் கூட அந்த குற்ற உணர்ச்சி என் மனதை அரித்துக்கொண்டே இருக்கிறது.
சில நாடுகளில் ராணுவத்தில் சில வருடங்கள் கட்டாயம் சேர்ந்து பணியாற்றவேண்டும் என இளைஞர்களுக்கு பயிற்சி தரப்படுவதுபோல இங்கே அப்படி ஒரு கட்டாய விவசாய பயிற்சி முறையை கொண்டுவரவேண்டும். கல்லூரிகளில் குறைந்தது ஒரு வருடமாவது விவசாயம் குறித்த படிப்பையும் பயிற்சியையும் கற்கவேண்டும் என்கிற நடைமுறையை கொண்டுவரவேண்டும்.. அப்போதுதான் நம் இளைஞர்களுக்கு விவசாயத்தின் பக்கம் பார்வை திரும்பும்.. விவசாயி இல்லையேல் அனைவரும் பட்டினி கிடந்தே சாகவேண்டும் என்பதை மறந்துவிடவேண்டாம்” என விவசாயத்தின் மேன்மையை பேசினார் பாக்யராஜ்.
இவர்கள் தவிர விவாசாயம் சார்ந்து மற்ற துறைகளில் இருந்து விருதுபெற்ற பலரும் தங்களது அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்கள்.
No comments:
Post a Comment