பாக்யராஜின் சீடர் இயக்கத்தில் உருவாகும் ‘தொட்ரா’..!
பாண்டியராஜன் மகன் நடிக்கும் ‘தொட்ரா’..!
காதலர்களின் முக்கிய பிரச்சனையை வெளிச்சம் போட்டுக்காட்ட வரும் ‘தொட்ரா’..!
J.S அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தொட்ரா’. இந்தப்படத்தை இயக்குனர் கே.பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் பாபிசிம்ஹா நடித்த ‘சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது’, ராம்கோபால் வர்மாவின் ‘சாக்கோபார்’ உட்பட சுமார் பதினெட்டு படங்களை வெளியிட்டவர். இப்போது இயக்கத்தில் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார்..
நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் படத்தின் கதாநாயகனாக நடிக்க, வீணா என்கிற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார்..
சரவணக்குமார் புது வில்லனாக அறிமுகமாகிறார். "மெட்ராஸ்" பட வில்லன்களைப் போல இதில் முழுக்க முழுக்க விளையாடியிருக்கிறார். ஒரு படம் வெற்றியடைய கதாநாயகனை எதிர்ப்பவர் சரியான தேர்வாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவராக சரவணக்குமார் இப்படத்தில் பார்ப்பவர்களுக்கு பயமேற்படுத்தும் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர்களுடன் இயக்குனர் ஏ.வெங்கடேஷ், மைனா சூசன், தீப்பெட்டி கணேசன், கூல் சுரேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குநர் மதுராஜ் கூறியதாவது...
இன்று இருக்கக்கூடிய சமூக சூழலில் உறவுகள் எப்படி மதிக்கப்படுகின்றன? பண ஏற்றத்தாழ்வுகள், பிரிவினை ஏற்றத்தாழ்கள் என்ற இரண்டும்தான் உறவுகளை இணைப்பதோ பிரிப்பதோ செய்கிறது.
மிகப்பெரிய பணம் உள்ளவர் சாதி ரீதியாக அடித்தட்டில் இருந்தாலும் மேல்தட்டில் உள்ளவர்களுடன் சம்பந்தம் வைத்துக்கொள்ள தடையிருப்பதில்லை.
பணமற்றவர்கள் தங்கள் மனதின் தேடலை நிறைவேற்றிக்கொள்ள முயலும்போதுதான் பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது. அப்படி ஒரு பிரித்தாளும் கும்பல் எல்லா ஏரியாக்களிலும் உள்ளது. சிங்கத்திடமிருந்து தப்ப முதலை வாய்க்குள் மாட்டிக்கொள்வது போல அங்கே காதலும் காதலர்களும் சிதைக்கப்படுகிறார்கள்.
காதல் என்றாலே பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.. இதில் வீட்டைவிட்டு வெளியேறும் காதலர்கள் எதிர்கொள்ளும் போராட்டம் ரொம்பவே கடினமான ஒன்று. அதிலும் அவர்கள் வழிமாறிப்போய் காதல் வியாபரிகளின் கையில் சிக்கிக்கொண்டால்..? இப்படி ஒரு விஷயத்தைத்தான் இந்தப்படத்தில் சமூக கண்ணோட்டத்துடன் பேசியுள்ளேன்.
இந்த மாதிரி சம்பவங்கள் சட்டத்தின் கண்காணிப்பில் வருவதே இல்லை. தன்னைச் சார்ந்தவர்களாகவே இருந்துகொண்டு எதிராக காய்களை நகர்த்திக்கொண்டே இருப்பார்கள். இப்படி காதலர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் மாட்டிக்கொள்ளும் பல நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து கதையை செதுக்கியுள்ளோம்.
பரத்துக்கு ஒரு "காதல்" போல பிருத்விக்கு "தொட்ரா" நல்ல பேர் வாங்கித்தரும்.
சினிமாவில் மிகமிக நல்ல பையன். அமைதி, ஸ்டார் வீட்டுக் கன்றுக்குட்டி போன்ற எந்த பந்தாவும் இல்லாதவர்.
இந்தப் படத்துக்கு பிருத்விதான் சரியா இருப்பான்னு எனக்கு கைகாட்டிவிட்டவர் என் குருநாதர் கே. பாக்யராஜ் . முழுக்க முழுக்க சரியாகவே அமைந்திருந்தார் பிருத்வி.
வட மாவட்டங்களில் நடைபெற்ற, தமிழ்நாட்டை உலுக்கிய இரண்டு பயங்கரமான உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளது.
தயாரிப்பாளர் சந்திரா சரவணக்குமார் சினிமாவுக்குக் கிடைத்திருக்கும் மற்றொரு பெண் தயாரிப்பாளர்.
இதனால் என்ன வருமானம் வரும் எனக் கேட்காமல்.. இதனால் நீ வெற்றி பெற்றுவிடுவாயா எனக் கேட்டு தயாரிக்க முன் வந்தார்.
வியாபாரத்தில் திட்டமிட்டுப் பழகியவர் என்பதால் எனக்கு இந்த படத்தை சரியாகத் திட்டமிட்டுக் கொடுத்தார். கிட்டத்தட்ட ஒரு தயாரிப்பு நிர்வாகியாகவே மாறிப்போனார். அவரின் ஆளுமை இந்தப் படத்தை விரைவாக முடிக்க உதவியது என்றார் இயக்குநர் மதுராஜ்.
கன்னடத்தில் ‘ஆப்தமித்ரா-2’வுக்கு இசையமைத்த உத்தமராஜா என்கிற இசையமைப்பாளரை இந்தப்படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வந்துள்ளார் மதுராஜ்.
போக்கிரிராஜா படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஆஞ்சி இந்தப்படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.
‘ஆறாது சினம்’ உள்ளிட்ட சில படங்களில் பணியாற்றிய ராஜேஷ் கண்ணன் என்பவர் படத்தொகுப்பைக் கவனித்துள்ளார். சண்டைக் காட்சிகளை உறியடி படத்திற்கு காட்சிகள் அமைத்த விக்கி நந்த கோபால் அமைத்துள்ளார்.
இந்தப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் தேவர்மகன் படப்பிடிப்பு நடந்த பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. தேவர்மகனுக்குப் பிறகு வேறெந்த படமும் அங்கு நடைபெறவில்லை. அதன்பிறகு நடந்த படப்பிடிப்பு "தொட்ரா"வின் படப்பிடிப்புதான் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர்கள், தொழிநுட்பக் கலைஞர்கள் விபரம்
நடிகர்கள் ; பிருத்விராஜன், வீணா, இயக்குநர் ஏ.வெங்கடேஷ், "மைனா" சூசன், "தீப்பெட்டி" கணேசன், கூல் சுரேஷ் மற்றும் பலர்
படத்தொகுப்பு ; ராஜேஷ் கண்ணன்
ஒளிப்பதிவு ; ஆஞ்சி
இசை ; உத்தமராஜா
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ; மதுராஜ்
தயாரிப்பு ; J.S அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் சந்திரா சரவணக்குமார்
No comments:
Post a Comment