Friday, October 27, 2017

களத்தூர் கிராமம் – விமர்சனம்

விமர்சனம்:



போலீஸ் ரெக்கார்டில் கரும்புள்ளியாக குத்தப்பட்ட கிராமம் தான் தமிழக ஆந்திர எல்லையில் இருக்கும் களத்தூர் கிராமம். களவுத்தொழிலையே தங்களது குலத்தொழிலாக செய்து வரும் அந்த கிராமத்து மக்களுக்கு தலைவரான கிஷோர் போலீசுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்.. அதேசமயம் நியாய தர்மத்துக்கு கட்டுப்பட்ட அவரது உயிர்நண்பன் வீரண்ணாவோ (சுலில் குமார்) சரியான சபல பேர்வழி..



அதனால் உள்ளூரில் பெண் கிடைக்காத அவருக்கு கிஷோரின் உத்தரவாதத்தின் மூலம் பெண் கொடுக்க பக்கத்து கிராமத்தில் ஒரு குடும்பம் முன்வருகிறது.. ஆனால், நண்பனுக்காக பெண் கேட்க, சொன்ன நேரத்தில் கிஷோர் வரமுடியாமல் போக நண்பர்கள் இருவருக்கும் பகை மூள்கிறது. இது ஜெயிலுக்கு சென்ற கிஷோரின் மனைவி யக்னாவை அபகரிக்கும் அளவுக்கு வீரண்ணாவை தூண்டிவிடுகிறது. இதனால் ஏற்பட்ட மோதலில் வீரண்ணாவை தானே கொல்லவேண்டிய சூழலுக்கு ஆளாகிறார் கிஷோர்.



அதற்கு பிராயச்சித்தமாக தங்களுக்கு பிறந்த மகனை வீரண்ணாவின் பெற்றோரிடம் கொடுத்து நல்லவிதமாக வளர்க்க சொல்கின்றார் கிஷோர். ஆனால் அவர்களோ கிஷோர்-யக்னா மீது வெறுப்பை ஊட்டி வளர்ப்பதுடன், சிறுவனை அழைத்துக்கொண்டு ஊரைவிட்டே வெளியேறுகின்றனர்.



வருடம் பல உருண்டோட வயதானாலும் ஒருபக்கம் தனது மகனை தேடிக்கொண்டே, இன்னொரு பக்கம் தனது ஊருக்குள் போலீஸ் நுழையாமல் கம்பீரம் காக்கிறார் கிஷோர். ஒருகட்டத்துக்குள் துரோகிகள் சிலரின் உதவியுடன் சில சதிவேலைகள் பார்த்து போலீஸார் களத்தூர் கிராமத்துக்குள் நுழைகின்றனர்.. அங்கு நடக்கும் கலவரத்தில் கிஷோரின் கூட்டாளிகள் என்கவுண்டரில் கொல்லப்படுகின்றனர்.



போலீஸின் காலடி படாமல் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை கட்டிக்காத்த கிஷோர் இதற்கு பதிலடி கொடுத்தாரா.. இல்லை போலீஸ் அடக்குமுறைக்கு பலியானாரா..? சிறுவயதில் பிரிந்த கிஷோரின் மகன் என்ன ஆனார் என்கிற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது மீதிக்கதை.



படம் முழுவதும் கிட்டத்தட்ட பிளாஸ்பேக்கிலேயே அதுவும் இரண்டுவிதமான காலகட்டத்திலே நகர்வதாக திரைக்கதை அமைந்துள்ளது. அதறேகேற்றபடி இரண்டுவிதமான தோற்றங்களில் கருவத்திருக்கை என்கிற கேரக்டரில் கச்சிதமாக பொருந்தியுள்ளார் கிஷோர். சொல்லப்போனால் அவரைத்தவிர அந்த கேரக்டரில் வேறு யாரையும் நினைத்து பார்க்கமுடியவில்லை. மொத்தக்கதையையும் தனது தோளில் சுமந்து தூக்கி செல்கிறார் கிஷோர்.



கிஷோரின் நண்பன் வீரண்ணாவாக வரும் சுலில் குமார், பார்வையிலும் செயலிலும் தெனாவெட்டாக, பார்க்கும் நமக்கே கோபம் வரும் விதமாக தனது கேரக்டரை உள்வாங்கி பிரதிபலித்துள்ளார். கிஷோரின் மகனாக வரும் மிதுன்குமார் தானும் பொருத்தமான தேர்வுதான் என தனது பங்களிப்பை நூறுசதவீதம் தந்திருக்கிறார். தனது தந்தை பற்றிய உண்மையை அறிந்துகொள்ளாமலேயே அவரது கேரக்டரை நகர்த்தி சென்றிருப்பதன்மூலம் திரைக்கதைக்கு நியாயம் செய்துள்ளார் இயக்குனர் சரண் அத்வைதன்..



நாயகி யக்னா ஷெட்டி, அந்த களத்தூர் கிராமத்து பெண்ணாகவே மாறிப்போய்விட்டார். ஊரார் முன்னிலையில் வீரண்ணாவின் முகத்தை தோலுரித்துக்காட்டி கிஷோருடன் அவர் கிளம்பும் காட்சி கதைக்கு வலு சேர்க்கும் ஒன்று. வீரண்ணாவின் தந்தையாக வரும் நம்ம ராகுல் தாத்தாவும், அவரது மனைவியாக வருபவரும் யதார்த்தம் கலந்த, ஒரு சாமான்ய பெற்றோரின் ஆதங்கத்தை மிகச்சரியாக வெளிப்படுத்தி உள்ளனர்..



நீதிபதியாக, விசாரணை கமிஷன் அதிகாரியாக நடிப்பில் வரும் அஜய் ரத்னம், காவல்துறையினரை சாட்டையடி வார்த்தைகளால் அவர் விளாசும் காட்சிகளும், விசாரணையை நேர்மையாக நடத்தும் விதமும் நீதித்துறையின் மீதான மதிப்பை உயர்த்தவே செய்கின்றன. தவிர, இந்தப்படத்தில் காவல்துறை அதிகாரிகளாக, காவலர்களாக நடித்துள்ள அனைவரும் எந்த இடத்திலும் இது ஒரு படம் என நாம் நினைத்துவிடாதபடி, வலம் வருகின்றனர். அதுதான் இந்தப்படத்தின், இந்தக்கதையின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது.



படம் முழுவதும் பிளாஸ்பேக் காட்சிகளாக கதை விரிந்தாலும் எடிட்டர் சுரேஷ் அர்ஸின் தெளிந்த நீரோடை போன்ற படத்தொகுப்பு குழப்பமில்லாமல் படத்துடன் ஒன்ற நமக்கு உதவுகிறது. சுற்றுப்பக்கம் அனைத்தும் கருவேல மரங்கள் அடங்கிய ஒரு கிராமத்தை எப்படித்தான் கண்டுபிடித்தார்களோ அந்த கிராமும் அது சார்ந்த மலைப்பகுதியும் ஒளிப்பதிவாளர் புஷ்பராஜ் சந்தோஷின் கைவண்ணத்தில் நம்மையும் களத்தூர் கிராமத்துவாசியாகவே மாற்றி விடுகிறது.



இந்த மொத்தப்படத்திற்கும் தனது பின்னணி இசையால் உயிரூட்டியுள்ளார் இசைஞானி இளையராஜா.. படம் துவங்கியது முதல் வேறெந்த சிந்தனையும் இல்லாமல் படம் முடியும்வரை நாமும் கதை மாந்தர்களுடன் பயணிப்பதற்கு திரைக்கதையுடன் சேர்த்து பின்னணி இசையும் பக்கபலமாக இருப்பதை மறுக்க முடியாது.



இந்தப்படத்தில் ஆங்காங்கே சின்னச்சின்ன குறைகள் தென்பட்டாலும் கூட, நல்ல சினிமாவில் தேடித்தேடி குறைகள் கண்டுபிடிப்பது சரியான விஷயம் இல்லை என்பது படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது உங்களுக்கும் புரியும். மொத்தத்தில் இந்த களத்தூர் கிராமம் ரசிகர்களை, இரண்டுமணி நேரம் அப்படியே முற்றிலும் மாறுபட்ட ஒரு உலகத்திற்கு இந்தப்படம் அழைத்து செல்கிறது..



தனது முதல் படத்திலேயே அழுத்தமான ஒரு உண்மை சம்பவத்தை கையிலெடுத்ததுடன் அதை கொஞ்சம் கூட அலுப்பு தட்டாமல் படமாக்கிய சரண் அத்வைதனை, அறிமுக இயக்குநர் என்று சொன்னால் நம்புவது கடினம் தான். தமிழ் சினிமாவுக்கு நம்பிக்கையான இன்னொரு இயக்குநர் கிடைத்துவிட்டார் என தாரளமாக சொல்லலாம்.



நல்ல சினிமா வரவில்லை என குறைபட்டுக் கொள்பவர்கள் களத்தூர் கிராமம் பார்த்துவிட்டு கைத்தட்டிக்கொள்ளலாம் நல்ல சினிமா ரசிகர்கள்



களத்தூர் கிராமம்- ஒரு வாழ்வியல் பதிவு

No comments:

Post a Comment